அப்பழுக்கற்ற சருமம் மற்றும் நீண்ட கூந்தல் பெற; ஒரு கைப்பிடி அரிசி போதும்!

0
622

அடுத்த முறை நீங்கள் சாதம் செய்தால் அரிசி ஊறவைத்த தண்ணீரையோ அல்லது சாதம் வடித்த நீரையோ வீணாகக் கீழே ஊற்றிவிடாதீர்கள். இந்த பதிவை படித்தப் பிறகு உங்களுக்கே அது ஏனென்று புரியும். நாம் யாரும் நினைத்துக்கூட பார்க்காத பல பலன்களைத் தரக்கூடியது இந்த நீர்.

சீனா, ஜப்பான் மற்றும் பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் பெண்களின் அப்பழுக்கற்ற சருமத்திற்கும், மிருதுவான நீண்ட கூந்தல் அழகிற்கும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று பாரம்பரியமாக அவர்கள் உபயோகிக்கும் இந்த அரிசி நீர்தான். அரிசி ஊறவைத்த நீரில் நிறைந்துள்ள வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள், தலை முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

தயாரிக்கும் முறை:

1. அரிசி ஊற வைத்த நீர்:

பயன் – சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற, இழந்த நிறத்தை திரும்பப் பெற, முகம் பளிச்சிட, மென்மையான சருமம் பெற.

அரிசி1 கப்
குளிர்ந்த நீர்2 கப்

அரிசியைக் குளிர்ந்த நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு ஒரு மூன்று நிமிடங்களுக்கு அதை விரல்களால் அலசுங்கள். பின்னர் அந்த நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

2. சாதம் வடித்த நீர்:

பயன் – மிருதுவான நீண்ட கூந்தல், உடல் ஆற்றலை அதிகரிக்க, உடல் எடையைக் குறைக்க.

ஏற்கனவே ஊற வைத்த அரிசியில் ஒரு பாதியை கொதிக்கும் நீரில் போட்டு, அரிசி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்பு அந்தக் கஞ்சியை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அரிசி மாவு:

பயன் – இறந்த செல்களை அகற்ற, இழந்த நிறத்தை திரும்பப் பெற, கருங்கறைகளை அகற்ற.

ஊற வைத்த அரிசியின் மீதமுள்ள பாதியில் சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் போன்ற பக்குவத்தில் வழித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

அரிசி ஊற வைத்த நீர்:

1. அதிகம் வெளியில் சுற்றுபவராக இருந்தால் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து எப்போது வெளியே சென்றாலும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். தாகம் எடுக்கும் போதெல்லாம் அதைத் தணிக்க தண்ணீர் குடிப்பதை போன்று உங்கள் சருமம் மிகவும் வறண்டது போல் நீங்கள் உணரும் போதெல்லாம் இந்த நீரைச் சிறிது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதனால் கண்ணில் வைத்த மை போன்ற ஒப்பனைகள் கலையாமல், முகம் கழுவியது போன்ற ஒரு புத்துணர்வை நீங்கள் பெற முடியும்.

2. வீடு திரும்பிய பிறகு இந்த நீரில் வெள்ளை நிறத் துணியையோ அல்லது பஞ்சையோ நனைத்து முகம் முழுவதையும் துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அழுக்கு முழுவதும் அந்தத் துணியில் வந்ததை நீங்களே பார்க்க முடியும். இதனால் மேனியில் தேங்கிய  அழுக்கின் காரணமாக முகப்பரு வருவதைத் தடுக்கலாம்.

3. ஏதேனும் விழாவிற்குச் செல்லப் போகிறீர்களா? ஆனால், உங்களது முகம் கலையிழந்து வாடியது போல் இருந்தால் கவலை வேண்டாம். துணியையோ அல்லது காகிதத்தையோ இந்த நீரில் நனைத்து முகத்தின் மீது பேக் போல ஒரு 20 நிமிடங்களுக்குப் போடுங்கள். அந்த நீரை முழுமையாக நமது சருமம் உரிஞ்சி எடுத்துவிடும். பின்னர் முகத்தைக் கழுவி பாருங்கள், குழந்தையின் மேனியைப் போன்ற மென்மையான மற்றும் பளிச்சிடும் உங்கள் முகத்தை.

சாதம் வடித்த நீர் (கஞ்சி): 

இந்தக் கஞ்சை நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக முடியின் வேர்க் கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்யுங்கள், பின்பு கூந்தலின் முனை வரை தேய்த்து ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் தலைக்குக் குளியுங்கள். நமது முன்னோர்களைப் போன்ற நீளமான கூந்தலை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

இந்த நீரில் சிறிது உப்பு சேர்த்து தினமும் சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் நன்கு பசி எடுப்பது, ஜீரண சக்தியை அதிகரிப்பது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுவது போன்ற பலன்களைப் பெறலாம்.

அரிசி மாவு:

மசிய அரைக்காமல் சிறிது கரகரப்புடன் இருக்கக் கூடிய இந்த மாவை வாரம் ஒரு முறை மென்மையாக முகம், கை, கால்களில் வட்ட வடிவில் தேய்ப்பதால் இறந்த செல்களை அகற்றி, இழந்த நிறத்தை நாம் திரும்பப் பெற இது வழி செய்யும்.

சருமம் மற்றும் கூந்தல் நலனுக்காக அழகு நிலையங்களிலும், மருத்துவரிடமும் அதிகம் பணம் செலவழிக்கும் நாம், எளிதாக கிடைக்கக்கூடிய இந்த அரிசி நீரைப் பயன்படுத்தி அந்தச் செலவுகளை தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, இதுவே நமது முன்னோர்களும் பின்பற்றிய பாரம்பரியமான அழகுக் குறிப்பாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY